வாலாஜாபாத்தில் 100% குடிநீர் இணைப்பு: பேரூராட்சி நடவடிக்கை

வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு வீடுகளில் பேரூராட்சி அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளதாக பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் வந்தன.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்று உள்ள இணைப்புகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா கூறுகையில், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டு வரி, குழாய் வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நிலுவையின்றி பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மேலும் பேரூராட்சி உள்ள வீடுகள் முழுவதும் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் 100 சதவீத அனைத்து வீடுகளிலும் வசிக்கும் மக்கள் வரி செலுத்தி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.  இந்த வரிகள் மூலம் பேரூராட்சிக்கு தேவையான அனைத்து திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என செயல் அலுவலர் தெரிவித்தார்.