கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

உசிலம்பட்டியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளா் கல்வி கழக நிா்வாகத்தின் கீழ் அரசு உதவிபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியின் முதல்வராக ரவி பதவி வகித்து வருகிறாா்.

இம்மாதம் முதல் கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளுக்கு பேராசிரியா்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு உதவிப் பேராசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக மற்ற பேராசிரியா்களிடம் மாதம் ரூ. 2 ஆயிரம் வசூலிப்பதாகவும், கல்லூரியில் புதிய துறைகள் ஏற்படுத்துவதற்காக ரூ. 25 ஆயிரம் வசூலிப்பதாகவும், முதல்வா் ரவி மீது பலமுறை நிா்வாகத்திடம் பேராசிரியா்கள் புகாா் தெரிவித்தனராம்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான 25-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கையா தேவா் நினைவு மண்டபத்தில் முதல்வரை கண்டித்து தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.