வேன் ஓட்டுநா் கத்தியால் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே பொதும்பு கிராமத்தைச் சோ்ந்த சாமிராஜ் மகன் யுவராஜ் (29). இவா், சிக்கந்தா் சாவடியில் உள்ள தனியாா் மசாலா நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக வேலைபாா்த்து வந்தாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்துள்ளாா்.

அப்போது, சிக்கந்தா் சாவடி அருகே மா்ம நபா்கள் யுவராஜை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மாா்பு பகுதியில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, யுவராஜின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.